அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய கார்பெட் ஏரியா, யூ.டி.எஸ்..! - பண இழப்பைத் தவிர்க்க டிப்ஸ்

ரியல் எஸ்டேட் பற்றிய கட்டுரை தொகுப்பு
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

அடுக்குமாடி வீடு... கவனிக்க வேண்டிய கார்பெட் ஏரியா, யூ.டி.எஸ்..! - பண இழப்பைத் தவிர்க்க டிப்ஸ்

Post by தருண் »

அடுக்குமாடி வீடுகள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத வாழ்விடங்களாக மாறி வருகின்றன. அடுக்கு மாடியில் ஒரு வீட்டை வாங்கும்போது அதன் உண்மையான விலையை நாம் கணக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் கொடுக்கும் பணத்துக்கு எவ்வளவு மதிப்புடைய பொருள் நமக்கு கிடைக்கிறது என்று அறிய முடியும்.

மூன்று விஷயங்கள்...
அடுக்குமாடி வீடு வாங்கும்போது பின்வரும் மூன்று விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

1) நமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் அளவு மற்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட மனையின் அளவு ஆகியவை பற்றி தெரிய வேண்டும்.

2) நம் வீட்டின் விலை எதன் அடிப்படையில் கணக்கீடு செய்யப் படுகிறது, சூப்பர் பில்ட் அப் ஏரியா அளவிலா அல்லது பிளின்த் ஏரியா அல்லது கார்பெட் ஏரியாவில் மதிப்பிடப்படுகிறதா என்று அறிய வேண்டும்.

3) அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி, குடிபுகுந்த பின் மாதாந்தரக் கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது பற்றி முன்பே நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும்.

Image

யூ.டி.எஸ் என்பது...


நாம் பார்த்த, நமக்கு ஒதுக்கப்பட்ட மனையின் அளவைச் சொல்லும், பிரிக்கப்படாத மனை என்கிற யூ.டி.ஸ் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். யூ.டி.எஸ் என்றால் என்ன..?

உதாரணமாக, 10,000 சதுர அடி மனையில் 40,000 சதுர அடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கட்டடத்தில் 2,000 சதுர அடி வீட்டை ஒருவர் வாங்கினால், அவருக்கு 500 சதுர அடி பிரிக்கப்படாத மனை சொந்தமாகக் கிடைக்கும். நமக்குக் கிடைக்கும் பிரிக்கப்படாத மனை எவ்வளவு என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

குறைந்த அளவு வீடு உள்ள கட்டடத்தில் அதிக அளவில் மனை யின் பங்கு பொதுவாக ஒருவருக்குக் கிடைக்கும். பல்லடுக்கு கட்டடத்தில் பொதுவாக குறைந்த அளவு பிரிக்கப்படாத மனையே கிடைக்கும். இதை ஒருவர் தெரிந்துகொண்டால் அந்தப் பகுதியில் காலி மனை என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று தெரிந்துகொண்டு தனக்கு ஒதுக்கப் பட்ட பிரிக்கப்படாத மனையின் விலையை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

என் நண்பர் ஒருவர் இரண்டு கட்டடத்தின் விளம்பரங்களை என்னிடம் காட்டினார். அவற்றை எடுத்துப் பார்த்தபோது, பிரபல கட்டுமான நிறுவனத்தில் யூ.டி.எஸ் ஆக 200 சதுரடி எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. இன்னொரு கட்டடத்தில் யூ.டி.எஸ்-ஆக 600 சதுர அடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு கட்டடங்களும் சென்னையில் வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதியில் உள்ளன. 2,400 சதுர அடி கொண்ட காலி மனை சுமார் ரூ.96 லட்சத்துக்கு விற்கப்பட்டு வருகிறது (ஒரு சதுர அடி 4,000). அதன்படி உண்மையில் மனையின் விலையாக பிரபல கட்டுமான நிறுவனத்தில் ரூ.8 லட்சத்துக்கும் (200 சதுர அடி), இன்னொரு கட்டடத்தில் ரூ.24 லட்சதுக்கும் (600 சதுர அடி) காலி மனை கிடைக்கிறது.

பொதுவாக, பல மாடி கொண்ட கட்டுமான நிறுவனத்தில் மனையின் பங்கு குறைவாகக் கிடைக்கும். அதனால்தான் அவர்களால் குறைந்த விலைக்கு வீடு தரமுடிகிறது. பல வசதிகளையும் செய்து தரமுடிகிறது.

வீடு என்ற முதலீட்டில் மனையின் விலை ஒவ்வொரு வருடமும் ஏற்றம் காணக்கூடும். கட்டடத்தின் விலை ஒவ்வொரு வருடமும் வீழ்ச்சியடையக் கூடும். இப்போது சென்னை அண்ணா நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஃப்ளாட்டுகள் இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிதாக பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. முன்பு அங்கு பொதுவாக, இரண்டு அல்லது மூன்று தளங்கள் கொண்ட கட்டடங்களாக இருந்தன.

அங்கு வீட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிக யூ.டி.எஸ் கிடைத்ததால் கட்டுமான நிறுவனங்கள் அவர்களிடமிருந்து வாங்கி அதிக தளங்கள் கொண்ட வீடுகளைக் கட்டி, இலவசமாக புதிய வீட்டை பழைய உரிமையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. வீடு கட்ட ஆகும் செலவு களை புதிய உரிமையாளர்களிடம் வசூலித்துக் கொள்கின்றனர். அதனால் வீடு வாங்கும்போது நமக்குக் கிடைக்கும் மனையின் அளவு என்ன என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொண்டால், மனையின் விலையைத் தெரிந்து கொண்டால் அதன்பிறகு கட்டடத்தின் மதிப்பை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டடத்தின் அளவை பொதுவாக கார்பெட் ஏரியா அளவுகளிலும், பிளின்த் ஏரியா அளவுகளிலும் சூப்பர் பில்ட் அப் ஏரியா அளவுகளிலும் குறிப்பிட்டி ருப்பார்கள்.

கார்பெட் ஏரியா என்பது...


கார்பெட் ஏரியா என்பது வீட்டில் உள்ள சுவர்களைக் கழித்தபின் நமக்குக் கிடைக்கும் இடம். வீட்டின் உள்ளே கார்பெட் விரிக்க வேண்டும் என்றால், எவ்வளவு துணி வாங்க வேண்டும் என்று எப்படி கணக்கீடு செய்வோமோ அதன் அடிப்படை யில் கார்பெட் ஏரியா கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

பிளின்த் ஏரியா என்பது மொத்தமாக நமது வீட்டின் அளவு. வீட்டின் நான்கு பக்க முனைகளையும் அளந்து கணக்கீடு செய்வது பிளின்த் ஏரியா ஆகும். கட்டடம் கட்டும் போது நம் வீடு மட்டுமல்லாமல் பொதுவாக பல பகுதிகளை கட்டியிருப்பார்கள். மாடிப் படிகளுக்கான இடம், நீச்சல் குளம் போன்ற பொது பகுதி களுக்கான இடம் ஆகியவற்றின் அளவுகளையும் சமமாக அங்குள்ள வீட்டின் அளவில் சேர்த்து ‘சூப்பர் பில்ட் அப் ஏரியா’வாகக் கணக்கிடுவார்கள்.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (Real Estate Regulatory Authority – சுருக்கமாக, RERA) அனைத்து வீடுகளின் விலை யானது கார்பெட் ஏரியா அளவுகளின் கீழ்தான் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விலை கணக்கீடு செய்யும்போது, வெளிப்புற சுவர்களின் அளவைக் கழிக்க வேண்டும். உட்புறங்களில் சுவர் இருந்தால் அதன் அளவு களைச் சேர்த்துக்கொள்ளலாம். எளிமையாகச் சொன்னால், வீட்டில் உள்ள நான்கு பக்க சுவர் அளவுகளை மட்டும் கழித்தால் வருவதே கார்பெட் ஏரியா.

அதனால் கட்டடத்தின் மதிப்பீட்டைச் செய்யும்போது பிளின்த் ஏரியா அளவுகளிலும், சூப்பர் பில்ட் அப் ஏரியா அளவு களிலும், கார்பெட் அளவுகளிலும் கணக்கீடு செய்ய வேண்டும்.

நண்பர் கொண்டுவந்திருந்த இரண்டு வீட்டு விளம்பரங் களையும் பார்த்தபோது, முறையே பிரபல நிறுவனம் கட்டித்தரும் ஃப்ளாட்டில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா, கார்பெட் ஏரியா 1000, 1100, 850 என்றும் இன்னொரு கட்டடத்தில் 900, 1200, 800 என்ற அளவிலும் குறிப்பிடப்பட்டி ருந்தது. அதன்படி பார்த்தால், பிரபல நிறுவனத்தில் ஒதுக்கப் பட்ட வீட்டின் அளவு அதிகமாக இருந்தது.

அதிக வசதி என்று விளம்பரப் படுத்தப்படும் கட்டடங்களில் அதற்கான செலவுகளையும் நம்மிடமிருந்துதான் வசூலிப்பார்கள். இந்த வசதிகள் நமக்குத் தேவையானதா என்று அலசி ஆராய்ந்து, நமக்கு என்ன தேவையோ, அதைத் தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக கட்டடம் கட்டுவதற்கு சுமார் சதுர அடிக்கு 1,500 - 2,000 ரூபாய் அளவுக்கு செலவாகும். அதன்படி பார்த்தால், 1,100 சதுர அடி கொண்ட கட்டடத்தின் விலை (1,100 x 2,000) ரூ.22 லட்சம் ஆகும். எனவே, பிரபல நிறுவனம் கட்டிய கட்டடத்தின் விலை ரூ.46 லட்சம் (மனை ரூ. 24 லட்சம், கட்டடம் ரூ.22 லட்சம்) ஆகிறது.இன்னொரு நிறுவனம் கட்டிய கட்டடத்தின் விலை ரூ.32 லட்சம் (மனை ரூ.8 லட்சம், கட்டடம் ரூ.24 லட்சம்) ஆகிறது.

இவ்வாறு மிச்சமாகும் பணத்தில்தான் சில நிறுவனங்கள் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் பல வசதிகளைச் செய்து தருகின்றன. அதனால் வீடு வாங்கும்போது நமக்கு என்ன தேவை என்று பார்த்து வாங்க வேண்டும்.

வசதிகள்தான் முக்கியம் என்கிறவர்கள் புழங்கும் இடம் அதாவது, கார்பெட் ஏரியா குறைவாகக் கிடைத்தாலும் அதை வாங்கலாம். வசதி அவ்வளவு முக்கியம் இல்லை, சொத்தின் எதிர்கால மதிப்பு முக்கியம் என்கிறவர்கள் யூ.டி.எஸ் அதிகமாகக் கிடைக்கும் வீட்டை வாங்கலாம்.

மேலும், வீட்டை வாங்கிய பிறகு பெரிய கட்டடங்களில் மாதாந்தரப் பராமரிப்புச் செலவுகளுக்குப் பணம் கட்ட வேண்டிவரும். என்றாலும் நமக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக இந்தக் கட்டடங்களில் கிடைக்கும்.

சிறிய கட்டடங்களில் இந்தக் கட்டணம் குறைவாக இருந்தாலும் அந்தக் கட்டடத்தில் வீடு வாங்கியிருக்கும் பிற உரிமையாளர்களிடம் சுமூக உறவு எட்டவில்லை என்றால் பொதுவான செலவுகள் செய்வதில் பல சிக்கல்கள் நீண்டகாலத்தில் ஏற்படலாம். அதனால் வீடு வாங்கும்போது இவற்றையும் ஆராய வேண்டும்.

பொதுவாக, வீடு வாங்கும்போது நம் வாழ்நாள் சேமிப்பைச் செலுத்தி வாங்குகிறோம். மேலும் வருங்கால உழைப்பையும் கடன் அடைப்பதற்கு கொடுக்க வேண்டும்.

வீடு வாங்கும்போது அடிப்படை தகவல்கள்கூட தெரியாமல் பலரும் வாங்குகிறார்கள். அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு பணிநீக்க நடவடிக்கை களுக்குப் ஆளாகும்போது பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. அதனால் வீடு வாங்கும்போது அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து வாங்குவது நீண்டகாலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மகாராஷ்டிராவில் மாற்றம்!

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ரியல் எஸ்டேட் விற்பனை இந்தியா முழுக்க மந்தகதியில் இருக்கிறது. மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் விற்காமல் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை பல லட்சம் கணக்கில் உள்ளன. இந்த நிலையில், இந்த வீடுகளின் விற்பனை மீது விதிக்கப்படும் பலவகையான பிரீமியத் தொகையில் 50 சதவிகிதத்தை இந்த ஆண்டு முழுக்க தள்ளுபடி வழங்க மகாராஷ்டிரா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் வீடு விற்பனையின்போது ஸ்டாம்ப் டியூட்டி உள்பட 22 வகையான பிரீமியங்கள் மாநில அரசால் விதிக்கப் படுகின்றன. இந்த 50% தள்ளுபடியால் மகாராஷ்டிராவில் ரியல் எஸ்டேட் விலை குறையும். இதனால் பலரும் வீடு மற்றும் காலி மனைகளை வாங்க வாய்ப்புண்டு என்று கருதுகிறது மகாராஷ்டிரா அரசாங்கம்.

நன்றி
ந.விகடன்
Post Reply