பிராவிடன்ட் ஃபண்ட்... ஓய்வுக்கால ஊதியம் எவ்வளவு கிடைக்கும்?

சேமிப்பு பற்றிய தகவல் தொகுப்பு
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

பிராவிடன்ட் ஃபண்ட்... ஓய்வுக்கால ஊதியம் எவ்வளவு கிடைக்கும்?

Post by தருண் »

எம்.குமரவேல், பி.எஃப் உதவி கமிஷனர், திருநெல்வேலி.

ஓருவர் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும்போது அந்த நிறுவனத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வேலையில் இருந்தால் அந்த நிறுவனம் தொழிலாளர் சேமநல நிதியில் (EPF) தனது நிறுவனத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஒரு நிறுவனம் இ.பி.எஃப்பில் பதியப்பட்டு இருந்தால், அதன் தொழிலாளர்களுக்கு அவர் ஓய்வு வரும்போது பி.எஃப் கணக்கில் கட்டிய தொகை வட்டியுடன் அவருக்குக் கிடைக்கிறது.


மேலும், அவர் 10 ஆண்டுக்கும் மேற்பட்டு பி.எஃப் உறுப்பினராக இருந்திருந்தால், அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். உதாரண மாக, ஒருவர் 20 ஆண்டுகளுக்கு பி.எஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தியிருக் கிறார் எனில், ஒருவரின் பென்ஷனுக்குரிய அதிகபட்ச சம்பளம் ரூ.15,000-ஆக இருக்கிறது எனில், அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட, ஒரு ஃபார்முலா உண்டு. அது, ஓய்வூதியம் = ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய வருடங்கள்/70.

உதாரணமாக, கடைசி சம்பளம் ரூ.15,000. இதை 20-ல் பெருக்கி, அதை 70-ல் வகுத்தால் கிடைக்கும் தொகைதான் ஓய்வூதியத் தொகை. அதாவது, ரூ.15,000 X 20/70=ரூ.4,285. இந்த ஃபார்முலாபடி, ஒருவருக்கு ரூ.4,285 ஓய்வு ஊதியமாகக் கிடைக்கும்.

மேலும், இ.பி.எஃப் உறுப்பினர் வேலையில் உள்ளபோது இறந்தால், அவருடைய மனைவி, பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு அவர்களின் 25 வயது வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தவிர, அவரின் வாரிசுகளுக்கு அல்லது அவர் நியமனம் செய்துள்ளவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை இழப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆக, மேற்கூறிய பலன்களை ஓர் ஊழியர் இ.பி.எஃப்பில் உறுப்பினராக வேண்டியது முக்கியம். அவ்வாறு இ.பி.எஃப்பில் பதியப்பட்டுள்ள நிறுவனத்தில் சேரும்போது அவர் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்ன?

* முதலில், படிவம் 11-ஐ பூர்த்தி செய்து நிறுவனத்திடம் தர வேண்டும். அந்தப் படிவத்தில் முந்தைய நிறுவனத்தில் பி.எஃப் செலுத்தியிருப்பின், அதன் விவரத்தைக் கொடுக்க வேண்டும். பி.எஃப் பிடிக்கப்படும் பணியாளருக்கு யு.ஏ.என் (UAN -Universal Account Number) கொடுக்கப்படும். அது அவரின் பணிக்காலம் வரைக்கும் மாறாது.

Image

* நிறுவனம் மாறினாலும் இந்த எண் தொடரும். அவ்வாறு பழைய நிறுவனத்தின் மூலம் சந்தா செலுத்தியிருந்தால், அந்தக் கணக்கில் இந்தக் கணக்குடன் இணைத்துக்கொள்ள படிவம் 13-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதை ஆன்லைனிலும் செய்ய முடியும். ஒருவேளை, பழைய நிறுவனத்தில் சந்தா ஏதும் செலுத்தாமல் இருந்தால், அந்த உறுப்பினர் புதிதாக யு.ஏ.என் நம்பரை ஆன்லைன்மூலம் உருவாக்கலாம். அவ்வாறு உருவாக்கிய பின் அவர்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களை அப்டேப் செய்ய வேண்டும். அதாவது, அவருடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், தொலைபேசி எண், வங்கி எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி விவரம் மற்றும் பான் எண்ணைப் பதிவிட வேண்டும். முக்கியமாக, ஆதார் எண்ணை யு.ஏ.என் நம்பருடன் இணைக்க வேண்டும். அதில் உள்ள பெயர் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி யு.ஏ.என் விவரங்களுடன் மிகச் சரியாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்த பின்னரே ஓர் உறுப்பினர் இ.பி.எஃப் கணக்கை ஆன்லைனில் இயக்க இயலும்.

* அதன் பிறகு யு.ஏ.என் - கே.ஒய்.சி (UAN - KYC), ஆதார், வங்கி விவரம், தொலைபேசி எண் அனைத்தும் யு.ஏ.என் நம்பருடன் இணைத்தவுடன் உறுப்பினர் இணைய வாயிலாக அவரின் சேமிப்பை எடுக்க இயலும்.

* அடுத்து, இ-நாமினேஷனை இணைய வாயிலாகப் பூர்த்தி செய்தல் மிக மிக அவசியம். ஓர் உறுப்பினர் தான் இறந்த பின்னர், தன் குடும்பத்துக்கு எந்தவித பிரச்னையும் இன்றி அவருடைய தொகையும் பென்ஷனும் கிடைக்க விரும்பினால், அவர் இ-நாமினே ஷனைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், ஓர் உறுப்பினர் இறந்த பின், அவர் யாரை நியமித்துள்ளாரோ, அவரிடம் எந்தவிதச் சிக்கலும் இன்றி பணத்தை செட்டில் செய்ய இயலும். உதாரணமாக, இந்து சட்டப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரின் துணைவி மற்றும் பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடைக்கும்.

* மேலும், பிள்ளைகள் மைனர் களாக இருந்தால், அவரின் தாய்க்குப் பாதுகாப்பாளர் என்ற முறையில் கிடைக்கும். ஆனால், கிறிஸ்துவ மற்றும் முகமதியர் சட்டங்கள் வேறுபடுகிறது. அத்தகைய உறுப்பினர் இறந்து விட்டால் அவரின் குடும்பத்தார் வாரிசு சான்றிதழ் மற்றும் பாதுக்காப்பாளர் சான்றிதழை நீதிமன்றத்தில் பெற வேண்டும். அதைச் சமர்ப்பித்த பின்னரே பி.எஃப் தொகை செட்டில் மென்ட் செய்யப்படும்.

* இந்த சங்கடங்களைத் தவிர்க்க இ-நாமினேஷன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பின், உறுப்பினர் மரணமடைந்து விட்டால் அவர் தந்த நாமினேஷன்படி, பி.எஃப் தொகை செட்டில் செய்யப்படும். குடும்பத்தாருக்கு எந்தச் சிக்கலும் தொந்தரவும் இல்லாமல் பி.எஃப் பணம் கிடைக்கும்.

* யு.ஏ.என் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தவுடன் உங்களுக்கு யூசர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். இந்த பாஸ்வேர்டை யாரிடமும் பகிரக் கூடாது. ஏனெனில், நீங்கள் ஆன்லைனில் பணம் எடுக்க விரும்பினால், உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தியே செய்ய இயலும். நீங்கள் வேறு யாரிடமும் பகிர்ந்தால் அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு தந்த மாதிரி ஆகிவிடும்.

* ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் உங்கள் நிறுவனம் பணம் செலுத்தியவுடன், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குத் தகவல் வரும். அவ்வாறு வரவில்லை எனில், உறுப்பினர் நிறுவனத் திடம் பி.எஃப் தொகையைக் கட்ட வைக்கலாம். அப்படியும் பி.எஃப் தொகை கட்டப்படவில்லை எனில், பி.எஃப் அலுவலகத்தில் நேரில், ஆன்லைனில்/ தபால் மூலம் புகார் செய்யலாம்.

* உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் உடனே யு.ஏ.என் - கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் பணம் பெற விரும்பி சமர்ப்பிக்கும்போதும் உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி வரும். அதை யாரிடமும் பகிரக் கூடாது.

* ஒவ்வொரு முறையும் வேலை செய்யும் அலுவலகம் மாற்றும்போதும் டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷனை ஆன்லைனிலோ, தபாலிலோ கொடுத்து முந்தைய கம்பெனியின் இருப்பை இந்த கம்பெனி மூலம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

* 01.09.2021 முதல் ஆதாருடன் இணைக்கப்பட்ட யு.ஏ.என் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் பணம் கட்ட முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஆதார் எண் இணைப்பதில் ஏதும் பிரச்னை இருப்பின் உடனடியாக பி.எஃப் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சரிசெய்யவும். இதற்கென தனியே உதவியாளர்கள் ஒவ்வொரு பி.எஃப் அலுவலகத்திலும் இருக்கிறார்கள்.

பி.எஃப் உறுப்பினர் முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். நிறுவனம் மாறும்போது உடனடியாக பி.எஃப் செட்டில்மென்ட் வாங்குவது நல்லதல்ல. முந்தைய உறுப்பினர் சேவை மற்றும் தொகையை, தற்போதைய யு.ஏ.என் நம்பருக்கு மாற்றுவதுதான் சாலச்சிறந்தது. இதனால், உறுப்பினருக்கு பென்ஷன் சர்வீஸ் கூடுதலாகும். அதனால் பென்ஷன் தொகை அதிகமாக வருவதற்கு ஏதுவாகும். உங்கள் பி.எஃப் கணக்கு தொடர்பான விஷயத்தில் அக்கறையுடன் நடந்துகொண்டால் மட்டுமே பிற்பாடு பெரிய சிக்கலில் சிக்காமல் இருக்கலாம்!

நன்றி
ந.விகடன்
Post Reply