தங்கம் வாங்கும்போதும் விற்கும்போதும் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

தங்கம்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

தங்கம் வாங்கும்போதும் விற்கும்போதும் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

Post by தருண் »

நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் முதன்மை முதலீடாகக் கருதிவரும் தங்கத்தின் விலை தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. பங்குச் சந்தை கண்டுவரும் வரலாறு காணாத ஏறுமுகம், கோல்டு இடிஎஃப்பில் பெருகிவரும் முதலீடு போன்றவை விலை சரிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.


இந்த விலைச் சரிவு தற்காலிகமானதுதான், அடுத்த ஓராண்டில் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொடக்கூடும் என்பதும் கணிப்பு. எனவே, நம்மில் பெரும்பாலானோர் தங்கம் வாங்க முனையலாம். அதற்கு முன் கவனிக்க வேண்டிய சில அம்சங்களைப் பார்ப்போம்.

தங்கத்தின் விலை...

பல்வேறு ஊடகங்களின் வழியே தங்கத்தின் அன்றாட விலை அறிவிக்கப்பட்டு வந்த போதிலும், விலையானது ஊருக்கு ஊர் வேறுபடும். ஒரே ஊரில்கூட கடைக்குக் கடை வித்தியாசப்படும். பெரும்பாலும், விலையைக் குறைக்க மாட்டார்கள். சேதாரம் மற்றும் செய்கூலியில் 0.5% - 1% குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அதிக சேதாரம் இருந்தால் பேரம் பேசவும் அவசியம் ஏற்படலாம்.

சொக்கத் தங்கம்...

மாற்று உலோகக் கலப்பு இல்லாத தங்கமே சொக்கத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் நிறையளவு 24 காரட். இதுவே சுத்தமான தங்கம். அரை கிராம் முதல் 50 கிராம் வரை சொக்கத் தங்கம் விற்பனையில் உள்ளது. உள்ளூர் தங்க நகைக் கடைகளில் மட்டுமன்றி, அரசுடைமை வங்கிகள், தலைமை அஞ்சலகங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை தங்கம், வெள்ளி விற்பனை நிறுவனமான எம்.எம்.டி.சி (Minerals and Metals Trading Corporation), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, தனியார் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் 24 காரட் தங்கக் காசுகள் வாங்கலாம்.

அவ்வாறு வாங்கும்போது, தங்கக்காசு வைக்கப்பட்டுள்ள பேக்கேஜ் பிரிக்கப்படாமல் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். இத்துடன் இப்போது வாங்கி, பிறகு விற்கலாம் என்ற நோக்கத்தில் சுத்தத் தங்கக் காசு வாங்குவோர், தாமும் அந்த பேக்கேஜை பிரிக்காமல் வைத்திருப்பது அவசியம். தங்கக் காசுக்கும் செய்கூலி, சேதாரம் உண்டு. தங்கத்தின் விலையுடன் 8 முதல் 16 சதவிகிதம் செய்கூலி வசூலிக்கப்படுகிறது. சேதாரம் ஓரிரு சதவிகிதம் இருக்கும். தங்கக் காசை விற்கும் போது அதன் எடைக்கு உரிய தொகை கிடைக்கும்.

Image

ஆபரணத் தங்கம்...

சுத்தத் தங்கத்தின் நிறையளவு 24 காரட் அல்லது 1000 (999.9)ஆபரணத் தங்கம் என்பது 22 காரட், 18 காரட் அல்லது 14 காரட் என்ற அலகுகளில் இருக்கலாம். அதாவது 22 காரட் என்பது தங்கம் மற்றும் வெள்ளி (அல்லது துத்த நாகம்) கலந்தது. அதாவது 22+2 இதை 916 எனக் குறிப்பிடுவார்கள். இது எப்படி எனில், 22 X 100/24=91.6 இதேபோல் 18 காரட் = 18 X 100/24 = 750, 14 காரட் = 14 X 100/24=583 நம் நாட்டைப் பொறுத்தவரை ஆபரணத்தங்கம் மேற்கண்ட மூன்று வகையாகவே உள்ளது. ஆபரணத்தில் தங்கத்தின் அளவு மேற்கண்ட விகிதத்தில் இருக்கும்.

நகையின் விலை கணக்கிடுதல்...

நகையின் விலைக் கணக்கீடு என்பது 22 காரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கான விலை மற்றும் செய்கூலி/ சேதாரம் மற்றும் 3% ஜி.எஸ். டி ஆகிய மூன்றின் கூட்டுத் தொகையாக இருக்கும். ஒருவர் 12 கிராம் எடை உள்ள செயின் வாங்குகிறார் எனில், அதன் விலை பின்வருமாறு...

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் = ரூ.4,370

12 கிராம் தங்கம் விலை = 12 X 4,370 = 52,440

சேதாரம் + செய்கூலி 15% = 52,440 X 15/100 = 7,866

நகையின் விலை = 52,440 + 7,866 = 60,306

60,306-க்கு 3% ஜி.எஸ்.டி = 1809

செயினுக்கான மொத்தவிலை = 60306 + 1809 = 62115.

கல் வைத்த நகை...

சில கடைகளில் நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லையும் சேர்த்து எடை போடுவார்கள். சில கடைகளில் அதற்கு தனியே விலை சொல்வார்கள். கல்லையும் சேர்த்து எடை போட்டால் தங்கத்தின் விலைக்கே, கல்லுக்கும் விலை + சேதாரம் + ஜி.எஸ்.டி தர வேண்டியிருக்கும். மேலும், மேற்கண்ட நகை தேவை இல்லை, எனவே விற்றுவிடலாம் என்று அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தால் கல் எடை கழித்து தங்கத்தின் நிகர எடையைக் கணக்கிடுவார். அந்த விலையில் மிகவும் பழைய நகை என்றால் ஓரிரு சதவிகிதம் கழித்து விற்பனைத் தொகையைக் கணக்கிடுவார். எனவே, கல் எடையைத் தனியே கணக்கிடச் செய்து நகையின் விலையைத் தீர்மானிக்க வேண்டும்.

ஏனெனில், வாங்கும்போது ஒரு விலை கணக்கிடும் முறையும், விற்கும்போது மற்றொரு விலை கணக்கிடும் முறையும் பொதுவாக நகைக் கடைக்காரர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

இருவகை செய்கூலி...

செய்கூலி என்பது இரண்டு வகையாக வசூலிக்கப்படக் கூடும். அதாவது, தங்கத்தின் விலையில் இத்தனை சதவிகிதம் என்று கணக்கிடப்படலாம். அல்லது ஒரு கிராம் தங்க நகைக்கு இத்தனை ரூபாய் என்றும் கணக்கிடலாம். தங்கம் விலை இறங்கு முகமாக உள்ளபோது செய்கூலியை சதவிகித அடிப்படையில் கணக்கிடச் செய்வது லாபகரமானதாக இருக்கும். இதுவே, தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளபோது ஒரு கிராமுக்கு இத்தனை ரூபாய் செய்கூலி என்று கணக்கிடச் செய்யலாம்.

ஏனெனில், இவ்வளவுதான் என்றோ, இப்படித்தான் என்றோ கூலிக்கு நிலையான அளவுகோல் எதுவும் கிடையாது. கடைக்குக் கடை மாறுபடும். இதில், கடைக் காரர்கள் எந்த முறையைப் பின்பற்றுகிறார்களோ அதுதான். வாடிக்கையாளர் இந்த முறையில் தான் செய்கூலி கணக்கிட வேண்டும் எனச் சொல்ல முடியாது. சில கடைகளில் செய்கூலி கிடையாது; சேதாரம் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.

ஹால்மார்க்...

இந்திய தர நிர்ணய சபை (Bureau of Indian Standards - BIS) நகைக்கான தர நிர்ணயம் செய்து BIS முத்திரை பதிக்கிறது. அதாவது, அந்த நகையில் தங்கத்தின் அளவு 916, 750, 583 என இவற்றுள் எது என்பதை நகையில் பதிவு செய்வதுடன் நகைக் கடையின் அடையாளமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கவனிக்க வேண்டியவை...

நகைக் கடையில் நகை வாங்கும்போது அந்த நகையில் தங்கத்தின் அளவு எவ்வளவு, திருப்பித் தந்தால் எப்படி விலை நிர்ணயம், என்ன நிபந்தனை, நகைக்கான உத்தரவாதம் மற்றும் நகையின் விலையில் என்னென்ன இனங்கள் எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளன என்பது போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு நகைக்கான தொகையைச் செலுத்த வேண்டும்.

நன்றி
ந.விகடன்
Post Reply