ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்..!

காப்பீடு திட்டங்கள் பற்றிய கட்டுரைகள் இங்கே இடம் பெறும்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்... பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்..!

Post by தருண் »

வருமானம் ஈட்டும் ஒருவர் இந்த உலகில் இல்லாதுபோனால், அவரின் குடும்பத்தைக் காக்கும் கவசம் என ஆயுள் காப்பீட்டைக் குறிப்பிடலாம். இந்தக் காப்பீட்டு பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்தைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அவற்றை அறிந்துகொண்டால், அதிகம் பிரீமியம் கட்டும் பாதிப்பிலிருந்து எளிதில் தப்பிக்க முடியும்.


ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் நம் நாட்டில் விரும்பி வாங்குவதைவிட, விளக்கமாக எடுத்துச் சொல்லி விற்க வேண்டிய நிலையே உள்ளது. காரணம், நம் மக்களுக்கு காப்பீடு குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. அதே நேரத்தில் 15, 20 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் இன்றைக்கு நிலைமை எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது என்பது உண்மை.

மேலும், இன்றைய இளைஞர்கள் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் முழுமையான ஆயுள் காப்பீட்டு பாலிசியான டேர்ம் பிளானை இன்றைய காலகட்டத்தில் கேட்டுப் பெறுவது என்பது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கிறது. காப்பீட்டு பாலிசியின் பிரீமியத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னென்ன என்பதை இனி சுருக்கமாகப் பார்ப்போம்.

பாலிசிதாரரின் வயது

காப்பீடு எடுக்கும் பாலிசிதாரரின் வயதுதான் பிரீமியத் தொகையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியமாக வசூலிக்கப்படும் தொகை அதிகரிக்கும். காரணம், வயதாக வயதாக உடல் வலிமை குறைவதுடன், நோய் பாதிப்புக்கான அபாயமும் அதிகரிக்கும் நிலை உருவாகும். அந்த வகையில், ஒருவர் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் பாலிசி எடுத்தால் குறைவான பிரீமியம் இருக்கும்.

பாலினம்

பொதுவாக, உலக அளவில் ஆண்களைவிட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுள் 68 ஆண்டுகளாகவும் பெண்களின் சராசரி ஆயுள் 71 ஆண்டுகளாகவும் இருக்கிறது. அந்த வகையில் ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும்.

பாலிசிதாரரின் உடல் ஆரோக்கிய வரலாறு

காப்பீட்டு பாலிசி எடுக்கப் போகிறவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். ஒருவரின் உயரம். எடை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். அதன் அடிப்படையில் பாலிசி வழங்கப்படுவதுடன், பிரீமியமும் நிர்ணயிக்கப்படும்.

இருதய பாதிப்பு, புற்று நோய் போன்றவை இருந்தால் பாலிசி மறுக்கப்படலாம் அல்லது பிரீமியம் அதிகரிக்கப் படலாம். உங்களுக்கு ஏற்கெனவே ஏதாவது நோய் தாக்கியிருந்தால் பிரீமியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குடும்ப உடல் ஆரோக்கிய வரலாறு

ஒருவரின் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கிய வரலாறு மோசமாக இருந்தால் பாலிசி பிரீமியம் அதிகரிக்கும். அதாவது, பெற்றோர், உடன் பிறந்தவர் களுக்கு சர்க்கரை, இருதய பாதிப்பு இருந்தால் மகள்/மகன் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் அதிகரிக்கக்கூடும்.

Image

புகைப்பழக்கம்

ஒருவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அவருக்கு பிரீமியம் அதிகரிக்கும். காரணம், புகை பிடிப்பவருக்கு நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் போன்ற தீவிர நோய் பாதிப்புகள் வர அதிக வாய்ப்பிருக்கிறது. பாலிசி எடுத்த பிறகு, சில ஆண்டுகளில் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்ட பின் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது அதை காப்பீட்டு நிறுவனத்திடம் சொன்னால் பிரீமியத்தைக் குறைக்கும் வழக்கம் அமெரிக்கா வில் இருக்கிறது. இந்தியாவில் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. பாலிசி எடுக்கும்போது, என்ன பிரீமியம் இருக்கிறதோ, கடைசிவரைக்கும் தொடர்கிறது.

பொழுதுபோக்குகள்

உங்களின் பொழுது போக்குகள் ரிஸ்க் கொண்டதாக இருந்தால், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் அதிகரிக்கும். உதாரணமாக, வார இறுதியில் கார் பந்தயம், மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபட்டால் அதிக பிரீமியம் இருக்கும். இதை மறைத்து பாலிசி எடுக்கும்பட்சத்தில், மலையேற்றத்தில் இருக்கும்போது அல்லது கார் பந்தயத்தின்போது மரணம் நிகழ்ந்தால் இழப்பீடு மறுக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

வேலையின் தன்மை

ஒருவரின் வேலையின் தன்மை, அதில் உள்ள ரிஸ்க்குக்கு ஏற்பவும் பிரீமியம் அதிகரிக்கும். விமானி, மரம் அறுப்பவர்கள், ரூப் போடுபவர்கள், மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட பல பணியாளர்களுக்கு மற்றவர்களைவிட அதிக ரிஸ்க் இருக்கிறது. அதனால், இவர்களுக்கு அதிக பிரீமியம் இருக்கும்.

எண்டோவ்மென்ட் பாலிசி, டேர்ம் பிளான்

ஒருவர் எடுக்கும் பாலிசி எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தும் பிரீமியம் அதிகரிக்கும், பாலிசியின் முதிர்வில் பணம் கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசியில் குறைவான கவரேஜ் தொகைக்கு அதிக பிரீமியம் இருக்கும். அதே நேரத்தில், முதிர்வு பலன் இல்லாத டேர்ம் பிளானில் அதிக கவரேஜுக்குக் குறைவான பிரீமியம் இருக்கும்.

பாலிசி தொகை, பாலிசி காலம்

ஒருவர் காப்பீடு எடுக்கும் தொகை, எத்தனை ஆண்டுகளுக்கு பாலிசியை எடுக்கிறார் என்பதைப் பொறுத்து பிரீமியம் அதிகரிக்கும். பொதுவாக, தொகை மற்றும் பாலிசிக் காலம் உயர உயர, பிரீமியம் அதிகரிக்கும்.

பாலிசி எடுக்கும் விதம்

ஆயுள் காப்பீடு பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் மூலம் எடுத்தால், ஆன்லைன் லைனில் எடுப்பதைவிட அதிகமாக இருக்கும். காரணம், ஏஜென்ட் கமிஷன் உள்ளது. அதே நேரத்தில், ஏஜென்ட் மூலம் எடுக்கும்போது பாலிசி பற்றிய விவரங்களை உங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வார்.

விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்வதில் உதவி செய்வார். பிரீமியம் கட்ட தொடர்ந்து நினைவுப் படுத்துவார். பிற்காலத்தில் இழப்பீடு விரைந்து கிடைக்க உதவுவார். எடுக்கபோகும் பாலிசியைப் பற்றி முழுமையாகத் தெரிந்தால், குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு பற்றி அதிகம் தெரிந்தவர்கள் என்கிற நிலையில் மட்டுமே ஆன்லைன் மூலம் எடுக்க வேண்டும்.

வெளிநாட்டுப் பயணம்

பாலிசி எடுப்பவருக்கு வெளி நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும்பட்சத்தில் அல்லது அவர் பணி நியமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்பட்சத்தில் அவருக்கு அதிக அளவு ரிஸ்க் இருக்கிறது. அந்த வகையில் அவருடைய ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தக் காரணிகள் எதுவும் உங்களுக்கு இல்லை என்கிறபட்சத்தில் உங்கள் காப்பீட்டுக்கான பிரீமியம் குறைவாகவே இருக்கும்!

ந.விகடன்
Post Reply