கே.ஒய்.சி என்பதன் மறுபெயர் சிக்கலா?

பொதுவான தலைப்பில் உள்ள கட்டுரைகள் இடம் பெறும் பகுதி
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 276
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

கே.ஒய்.சி என்பதன் மறுபெயர் சிக்கலா?

Post by தருண் »

முதலீட்டின் முக்கிய ஓர் ஆவணமாக கே.ஒய்.சி (know your customer) இருக்கிறது. முதலீடு செய்பவர் எந்த இடத்தில் வசிக்கிறார், சேவை வழங்கலாமா, பணம் எங்கிருந்து வருகிறது, அது சட்டப்படி ஈட்டப் பட்ட பணமா என்பது போன்ற விவரங்களை சேகரிப்பதுதான் கே.ஒய்.சி.


அடிப்படை கே.ஒய்.சி-யில் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் பான் நம்பர் (PAN Number) அடங்கிய விவரங்கள் இருக்கும். அடிஷனல் கே.ஒய்.சி-யில் முதலீட்டாளரின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பணம் வருவதற்கான வழிகள், அவர்களது அன்றைய பணமதிப்பு போன்றவை இடம்பெற்றிருக்கும்.

கே.ஒய்.சி-யை அரசாங்கம் கட்டாயப்படுத்தி இருப்பதன் நோக்கம், சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவர்த்தனைகளைத் (PMLA - Prevention of Money Laundering Act) தடை செய்வதும், லஞ்ச லாவண்யங்களைக் குறைப்பதும், வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்துகொள்ளவும்தான்.

கே.ஒய்.சி எங்கெல்லாம் தேவை?

எல்லா வகையான நிதி நிறுவன சேவைகளுக்கும் இந்த கே.ஒய்.சி அவசியம். உதாரணமாக, பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, காப்பீடு, வங்கிச் சேவைகள், வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகள், தற்போது சமூகத்தில், புழக்கத்தில் உள்ள மொபைல் பணப் பரிமாற்ற சேவைகள் (உதாரணமாக, பேடிஎம், கூகுள் பே) போன்றவற்றுக்குத் தேவைப்படுகிறது).

இந்த கே.ஒய்.சி, கடந்த பத்து வருடங்களில் பலமுறை மாற்றப்பட்டு, புதுப்புது வடிவங்களில் அவதாரம் எடுத்திருக்கிறது. கே.ஒய்.சி என்பது பெரும்பாலும் மாறாத நிலையான தகவலாகவே உள்ளது. இருந்தபோதிலும் மேற்கண்ட ஆறு சேவை நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெறுவதற்கு, நாம் ஒவ்வொரு முறையும் கே.ஒய்.சி செய்ய வேண்டியுள்ளது. ஒரே நிறுவனத்தில் பல சேவைகளைப் பெற்றாலும் பலமுறை கே.ஒய்.சி செய்ய வேண்டியுள்ளது. இதுவே வாடிக்கையாளர்கள் சலித்துக்கொள்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

எல்லா வகையான நிதிச் சேவைகளையும் பெற ஒரு முறை கே.ஒய்.சி செய்தால் போதுமானது என்று அரசுத் தரப்பில் அடிக்கடி சொல்லப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக கே.ஒய்.சி பெற்றுக்கொண்டுதான் உள்ளன.

Image

கே.ஆர்.ஏ...

கே.ஆர்.ஏ என்பது நோ யுவர் ரெஜிஸ்ட்ரேஷன் ஏஜென்சி (KYC Registration Agency) எனப்படும். இவற்றில், கேம்ஸ், கே ஃபின்டெக் (K fintech), டாட் எக்ஸ் (Dotex), சி.வி.எல் (CVL), என்.டி.எம்.எல் (NDML) ஆகியவை கே.ஒய்.சி தகவல்களைச் சேகரித்து பராமரிக்கும் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

இந்த கே.ஆர்.ஏ நிறுவனங்கள் சேகரிக்கும் எல்லா தகவல் களையும் திரட்டி அதை ஒன்றாக்கி, அதிலுள்ள தகவல்களைச் சரிபார்த்து, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இருந்தால், அவற்றை நீக்கி நன்கு பராமரித்த பின், சரியான தகவல்களைத் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்க சி.கே.ஒய்.சி (CentraI KYC - CERSAI.org) என்ற பொதுமுறை சார்ந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதுவான சி.கே.ஒய்.சி மையங்களுக்கு கே.ஒய்.சி தகவல் சென்ற பின் அங்கு பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின் கே.ஐ. என் (KIN - kyc identification number) என்ற நம்பர் தரப்படுகிறது. இந்த நம்பரை நாம் தேவைப்படும் நிதி நிறுவனங்களுக்குக் கொடுத்து, மீண்டும் கே.ஒய்.சி செய்வதைத் தவிர்க்கலாம் என்பது சி.கே.ஒய்.சி-யின் சாராம்சம். இதுபோன்று புதிய சி.கே.ஒய்.சி அமைப்பு உருவாக்கப் பட்டிருந்தாலும், தனித்தனியாக கே.ஒய்.சி கேட்பது நின்ற பாடில்லை. காரணம், சி.கே.ஒய்.சி எனப்படும் புதிய நடைமுறை மற்றும் கே.ஐ.என் (KIN) எனப்படும் நம்பர் முழுவதுமாகப் புரிபடவும் இல்லை, எங்கும் அறியப்படவும் இல்லை.

ரி-கே.ஓய்.சி

சி.கே.ஒய்.சி மற்றும் கே.ஐ.என் (KIN) இருந்தாலும், ரி-கே.ஓய்.சி (Re KYC) தேவை என்றும் இப்போது சொல்லப்படுகிறது. நாம் கே.ஒய்.சி பெரும்பாலும் மாறுவதில்லை என்று சொன்னோம். ஆனால், மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. முகவரி மற்றும் வாடிக்கையாளர் நிதி நிலைமை போன்றவை மாறிக்கொண்டு தான் உள்ளன. எனவே, இந்த மாறுகிற விவரங்களைச் சரியாக மாற்ற ரி-கே.ஒய்.சி செய்யப்படு கிறது. அதாவது, திரும்பவும் கே.ஒய்.சி செய்வதே ரி-கே.ஒய்.சி எனப்படுகிறது.

இந்த ரி-கே.ஒய்.சி இடைவெளி காலம், நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுகிறது. காரணம், வங்கிகளை நெறிப்படுத்தும் ஆர்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகளை நெறிப்படுத்தும் செபி போன்றவை புதுப்புது விதிமுறை களைக் கொண்டுவருகின்றன. எனவே ரி-கே.ஒய்.சி காலம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, வெவ்வேறாக உள்ளது. வங்கிகளில் அதிக ரிஸ்க் உள்ள வாடிக்கை யாளர்களுக்கு இரண்டு வருடத்துக்கு ஒருமுறையும் குறைந்த ரிஸ்க் உள்ள வாடிக்கையாளருக்கு பத்து வருடத்துக்கு ஒருமுறையும் ரி-கே.ஒய்.சி செய்ய ஆர்.பி.ஐ வலியுறுத்துகிறது.

ஐ.பி.வி...

முன்னர் கே.ஒய்.சி செய்யும்போது வாடிக்கையாளர் களை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புகைப்படம் மட்டும் இருந்தால் போதுமான தாக இருந்தது. தற்போது கே.ஒய்.சி செய்யப்படும் போது வாடிக்கையாளர் நேரிலோ, ஆன்லைன் மூலமாகவோ அவசியம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்கு ஐ.பி.வி (Inperson Verification - IPV) என்று பெயர். எனவே, ஃபண்ட் முதலீட்டில், முன்னர் சாதாரண முறையில் கே.ஒய்.சி செய்திருந் தாலும், இந்த ஐ.பி.வி முறையில் திரும்பவும் கே.ஒய்.சி செய்ய வேண்டும் என்று செபி கட்டாயப் படுத்துகிறது.

இ-கே.ஒய்.சி

இந்த கொரோனா காலத்தில், வாடிக்கையாளரை நேரில் பார்ப்பது சற்று சிரமமாக இருக்கும் என்பதால், இந்த ஐ.பி.வி முன்னர் மாதிரி செய்ய முடிவதில்லை. எனவே, தற்போது இ-கே.ஒய்.சி என்ற வகை அறிமுக மாகியுள்ளது. இதன் மூலம் ஒருவர் தனது ஆதார் நம்பரையும், போன் நம்பரையும் வைத்து மொபைல் போனில் வரும் ஓ.டி.பி (OTP) மூலம் இ-கே.ஒய்.சி செய்ய முடியும்.

இந்த வீடியோ மூலம் இ-கே.ஒய்.சி செய்வது, தளத்துக்குத் தளம் மாறுபடுகிறது. இதிலும் பல மாதங் களாக, பல மாறுதல்கள் செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது. இன்னும் முற்றிலுமாக எளிதாக்கப்பட வில்லை என்பதே பலரது கருத்து.

அறியாமையா, நடைமுறை சிக்கலா?

நாம் இப்போது ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்ப்போம். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து, கணவர் பெயர் முதலில், மனைவி பெயர் இரண்டாவதாக ஒரு வங்கியில் புதிதாக டீமேட் கணக்கைத் தொடங்குகிறார்கள். தேவையான கே.ஒய்.சி தகவலைக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாம் சரி, இன்னும் இரண்டு மாதம் கழித்து அதே தம்பதியினர் மனைவி பெயர் முதலாவதாகவும், கணவர் பெயர் இரண்டாவதாகவும் இருக்குமாறு டீமேட் கணக்கைத் திறக்க விரும்புகிறார்கள். தற்போது அதே வங்கி, திரும்பவும் அவர்களிடம் கே.ஒய்.சி கேட்கிறது. இதற்குக் காரணம், வங்கி ஊழியர்களின் அறியாமையா அல்லது வங்கியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களா என்று தெரியவில்லை.

கே.ஒய்.சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது இல்லாமல் எந்தப் பணப் பரிமாற்றத்தையும் செய்ய இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அரசும் இதை மேலும் எளிமையாக்கி சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்ட நடைமுறையைக் கொண்டுவந்தால் பணப் பரிவர்த்தனையும் முதலீடும் இனி அனுபவம் தருவதாக இருக்கும்!

நன்றி
ந.விகடன்
Post Reply